
வணிகம் மற்றும் நீதி ஆகியவற்றை இணைக்கும் ஒரு “கலப்பு மாதிரியை” உருவாக்குவதற்கான நோக்கினை கொண்டிருப்பது ஒரு விடயம்; ஆனால் எதனை உற்பத்தி செய்வது, எதனை விற்பனை செய்வது என்பதைத் தீர்மானிப்பது மற்றொரு விடயமாகும். “எமக்கு யார் நிதியளிப்பார்கள்?” என்ற வினாவிலிருந்து ” எவ்வாறு நமக்கு நாமே நிதி திரட்டிக்கொள்வது?” என்ற சிந்தனை மாற்றத்திற்கு நாம் நகர்ந்தபோது, இந்தச் சமூக நிறுவனங்களை கொழும்பிலிருந்து ஒரு அலுவலக மேசையில் அமர்ந்துகொண்டு வடிவமைக்க முடியாது என்ற விடயத்தில் உறுதியாக இருந்தோம்.
இந்த முயற்சிகள் எமது மனித உரிமைகள் முதலுதவி நிலையங்களை (HRFACs) நிலைபெறச் செய்ய வேண்டுமானால், அவை அந்தச் சமுதாயங்களின் யதார்த்தமான சூழலில் வேரூன்றியிருக்க வேண்டும். இந்த இடைவெளியைக் குறைப்பதற்காக, நாம் தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் ‘பங்கேற்புடனான வாய்ப்புகளை வரைபடமாக்கல்’ பயிலரங்குகளை ஆரம்பித்தோம். இதன் மூலம் தொழிற்துறை யோசனைகள் அந்தச் சமுதாயத்திற்குச் சொந்தமானதாகவும், உள்ளூர் வளங்களைப் பயன்படுத்துவதாகவும், உண்மையான பூர்த்தியாகாத தேவைகளை நிவர்த்தி செய்வதாகவும் அமைவதை உறுதிசெய்தோம்.
செயன்முறை: “கையிலுள்ள பறவை” மற்றும் Bricolage எண்ணக்கரு
எமது மனித உரிமைகள் மற்றும் சமூகத் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிலையங்கள், களமட்ட அளவிலான மனித உரிமைப் பாதுகாவலர்கள் மற்றும் சிறுதொழில் முயற்சியாளர்களை ஒன்றிணைத்தபோது, அவர்களிடம் என்ன இல்லை என்று நாங்கள் கேட்கவில்லை. மாறாக, அவர்களிடம் ஏற்கனவே என்ன இருக்கின்றது என்பதில் கவனம் செலுத்தினோம்.
பயிற்சி அமர்வுகளின் போது நடைமுறைச் சாத்தியமான தொழில்முயற்சியாண்மை கட்டமைப்புகளை அறிமுகப்படுத்தினோம். பங்கேற்பாளர்கள் “கையிலுள்ள பறவை” ஆய்வின் மூலமாக, தமக்குக் கிடைக்கக்கூடிய உடனடி இயற்கை, கலாச்சார மற்றும் மனித வளங்களை அடையாளம் கண்டனர். அதேபோல், அந்நேரத்தில் கிடைக்கும் எந்தவொரு மூலப்பொருட்கள் அல்லது வளங்களைக் கொண்டு ஒன்றை உருவாக்கும் அல்லது ஒழுங்கமைக்கும் “Bricolage” (பிரி்கோலேஜ்) என்ற எண்ணக்கருவையும் கற்பித்தோம். இந்த அணுகுமுறை உள்ளூர் “வலி காரணிகளை” கவரக்கூடிய மற்றும் நிதியுதவி பெறத்தக்க வாய்ப்புகளாக உருமாற்றுவதற்கு சமுதாயங்களை வலுவூட்டியது.
சிதைவுகளிலிருந்து மீண்டெழுதல்: அனர்த்த மீண்டெழுதிறனாகப் பொருளாதாரம்
இந்த வரைபடமாக்கல் பயிற்சிகள் ஒரு வெற்றிடத்தில் நடக்கவில்லை. அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ புயலின் பேரழிவுத் தாக்கம் இந்தப் பயிலரங்குகளில் பெரும் செல்வாக்கு செலுத்தியது.
இந்தச் புயலானது முறைசாரா தொழிலாளர்கள் மற்றும் சிறுதொழில் முயற்சியாளர்களின் பாதிப்புக்குள்ளாகும் தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, நாம் துலங்கல் (Response), இழிவாக்கல் (Reduce) மற்றும் புனர்வாழ்வு (Rehabilitation) ஆகியவற்றை கொண்ட “RRR” எண்ணக்கருவை அறிமுகப்படுத்தினோம். பொருளாதார தப்பிப்பிழைத்தல் என்பது அனர்த்த மீண்டெழுதிறனின் ஒரு முக்கிய அங்கமாகும் என்பதை நாம் உணர்ந்தோம். இந்த உடனடித் தொடர்பை வெளிப்படுத்தும் வகையில், கேகாலை மாவட்ட நிலையம் (HRSEDC) அவசரகால நிவாரண முன்முயற்சியொன்றை இச்செயற்திட்டத்துடன் ஒன்றிணைத்தது. பாதிக்கப்பட்ட 15 சிறுதொழில் முயற்சியாளர்களுக்குத் தலா 10,000 ரூபா மீட்பு மானியமாக வழங்கப்பட்டு, அவர்கள் விரைவாக மூலப்பொருட்களைக் கொள்வனவு செய்து மீண்டும் தொழிலை ஆரம்பிக்க உதவி வழங்கப்பட்டது.
உரிமைகள் மற்றும் வணிகத்தின் மேற்பொருந்துகை
உள்ளூர் தயாரிப்புகளை விற்பனை செய்வதில் மனித உரிமைப் பிரச்சாரம் எவ்வாறு பொருந்துகிறது? பயிலரங்குககளின் போது, சட்டக் கருவிகள் எவ்வாறு சமுதாய நிறுவனங்களைப் பாதுகாக்க முடியும் என்பதை நாம் விளக்கினோம். உதாரணமாக, உள்ளூர் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும், ஊழலில் இருந்து தமது வணிகங்களைப் பாதுகாக்கவும் ‘தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை’ (RTI) பயன்படுத்துவது குறித்து பங்கேற்பாளர்களுக்கு வழிகாட்டப்பட்டது.
ஓரங்கட்டப்பட்ட குழுக்கள் எதிர்கொள்ளும் முறைப்படுத்தப்பட்ட தடைகளையும் நாம் எதிர்கொண்டோம். பதுளையில், பெருந்தோட்டத்துறை தொடர்பான பிரச்சினைகள் காரணமாக வணிகப் பதிவு மறுக்கப்பட்ட ஒரு உள்ளூர் லட்டு உற்பத்தியாளரின் நிகழ்வை பங்கேற்பாளர்கள் கலந்துரையாடினர். இந்த யதார்த்தமானது பொருளாதார அபிவிருத்தியுடன் மனித உரிமைப் பிரச்சாரமும் இணைந்து பயணிக்க வேண்டும் என்ற ஒரு முக்கியமான செயற்திட்ட தத்துவத்தை வலியுறுத்தியது. ஏனெனில் கட்டமைக்கப்பட்ட பாகுபாடு முறைசார் வர்த்தகத்திற்கான பாதையைத் தடுத்தால், ஓரங்கட்டப்பட்ட தொழில்முயற்சியாளர்கள் வெற்றியடைய முடியாது.
களமட்ட புத்தாக்கங்களின் செழிப்பு
பங்கேற்பாளர்களின் குழுப்பணிகள் மூலம் மாவட்டங்கள் முழுவதும் பல்வேறு வகையான வணிக முன்மொழிவுகள் உருவாக்கப்பட்டன:
- விவசாயம் மற்றும் பாரம்பரிய உணவுகள்: அனுராதபுரம் மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதையும் சிறு விவசாயிகளுக்கு உயர் விலைகளைப் பெறுவதையும் நோக்கமாகக் கொண்டு, பாரம்பரிய சேதன அரிசியை பயிரிடுவதற்கும் சந்தைப்படுத்துவதற்கும் முன்னுரிமை அளித்தது. மொனராகலை ‘இந்துவர இனிப்பு புளி’ ஆரோக்கிய தயாரிப்புகளுடன், பாரம்பரிய குரக்கனை உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக நாமமாக உயர்த்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ‘ஊவா குரக்கன்’ திட்டத்தை முன்மொழிந்தது. புத்தளத்தில், 20 பயனாளி குடும்பங்களுக்கு விரிவடையும் தேசிய விநியோகம் மற்றும் ஏற்றுமதி சந்தைகளை ஆதரிக்கின்ற ஒரு மத்திய தாவர நாற்றுமேடை அமைப்பதில் சமுதாயம் கவனம் செலுத்தியது.
- பெறுமதி சேர்த்தல் மற்றும் பாதுகாத்தல்: அறுவடைக்கு பிந்தைய விரயத்தைத் தவிர்க்க, அனுராதபுரம், பதுளை மற்றும் புத்தளம் சமுதாயங்கள் நீரகற்றி உலர்த்தப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பதப்படுத்துவதை நீடித்து நிலைத்துநிற்கும் வாழ்வாதாரமாக அடையாளம் கண்டன. கேகாலை மசாலாப் பொருட்கள் மற்றும் கித்துள் பெறுமதி சேர்த்தலுக்கு முன்னுரிமை அளித்தது.
- சுற்றுச்சூழலுக்கு நட்புறவான கைவினைப்பொருட்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள்: பிளாஸ்டிக் இல்லாத பொருளாதாரத்தை நோக்கி நகரும் வகையில், கேகாலை குழுக்கள் களிமண் பொருட்கள் மற்றும் சூழல் நட்பு பொதியிடல்களை முன்மொழிந்தன. அனுராதபுரம் கையால் செய்யப்பட்ட சட்டிகள் மற்றும் மரத்தாலான கைவினைபொருட்களை முன்னிலைப்படுத்தியதுடன், ஏனையவர்கள் உள்ளூர் மருத்துவ இலைகள் மற்றும் பூக்களைப் பயன்படுத்தி மூலிகை சார்ந்த ஷாம்புகள் மற்றும் குளியல் திரவங்களை முன்மொழிந்தனர்.
யதார்த்தத்தை எதிர்கொள்ளல்: முன்னாலுள்ள சவால்கள்
புத்தாக்கங்கள் ஊக்கமளிப்பதாக இருந்தாலும், வரவிருக்கும் தடைகள் குறித்து மக்கள் யதார்த்தமாகவே இருந்தனர். வரைபடமாக்கலின் போது பங்கேற்பாளர்கள் ஆரம்ப மூலதனம் இல்லாமை, தொழில்நுட்ப அறிவு மற்றும் தரக் கட்டுப்பாட்டில் உள்ள இடைவெளிகள், களஞ்சியப்படுத்துதல் மற்றும் போக்குவரத்திற்கான போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை உள்ளிட்ட குறிப்பிடத்தக்க சவால்களை அடையாளம் கண்டார்கள்.
வரைபடத்திலிருந்து யதார்த்தத்திற்கு
இந்த வரைபடமாக்கல் பயிலரங்குகள் சமூக நிறுவனங்கள் தொட்டுணர முடியாத எண்ணக்கருக்களை, சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட உறுதியான வணிக முன்மொழிவுகளாக வெற்றிகரமாக மாற்றியுள்ளன. மேலிருந்து கீழாக திணிக்கப்படும் அனுமானங்களின் அடிப்படையில் அல்லாமல், களமட்டத்திலிருந்து கட்டியெழுப்பப்பட்ட ஒரு வரைபடம் இப்போது நம்மிடம் உள்ளது.
‘விருத்தி’ (Vriddi) செயற்திட்டம் முன்னோக்கிச் செல்லும்போது, இந்த முன்னுரிமை வாய்ப்புகள் விருத்தியடையும் கட்டத்திற்கு செல்வதுடன், அங்கு தொழில்நுட்ப பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் மூலம் அடையாளம் காணப்பட்ட தடைகளை நாங்கள் கையாள்வோம். இறுதியில், கொழும்பில் உள்ள எங்கள் சந்தாரா நெறிமுறை சார்ந்த சில்லறை விற்பனை மற்றும் கண்காட்சி நிலையத்தின் மூலமாக இந்த களமட்ட உற்பத்தியாளர்களை நகர்ப்புற நுகர்வோருடன் இணைப்பதே இலக்கென்பதுடன், இது உள்ளூர் மீண்டெழுதிறனை நீதிக்கான இயக்கத்தை மேம்படுத்தும் ஒரு நிலைபேண்தகு சமூக நிறுவனமாக மாற்றுகிறது.


