
மனித உரிமைகளும் வணிகமும் இணங்கக்கூடியவையா? நன்கொடையாளர் நிதி குறைந்து வரும் நிலையில், இலங்கையின் மனித உரிமைப் பாதுகாவலர்கள் தமது இலட்சியத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக சமூக தொழில் முயற்சியாண்மையை நோக்கி நகர்கின்றனர். உதவியளிக்கப்படும் நிதியில் தங்கியிருக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களை, “விருத்தி” (Vriddi) எவ்வாறு சிவில் உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் மீண்டெழுதிறனுடைய சமுதாயத்தால் வழிநடாத்தப்படும் நிறுவனங்களாக மாற்றியமைக்கிறது என்பதைக் கண்டறியுங்கள். செயற்பாட்டாளர்களிலிருந்து தொழில்முனைவோராக மாறிய எங்களது பயணம் தொடர்பில் வாசியுங்கள்.
பல தசாப்தங்களாக, இலங்கையில் சிவில் சமூகத்தின் இயக்கமானது செயற்திட்டச் சுழற்சிகளாலேயே தீர்மானிக்கப்பட்டு வந்தது. நாங்கள் ஒரு பிரச்சினையை கண்டறிந்து, ஒரு செயற்திட்ட முன்மொழிவை எழுதி நிதியுதவியை பெறுகிறோம், பின்னர் பணியைச் செய்கிறோம். ஆனால், அந்த நிதி வரவு நின்றுவிட்டால் என்ன நடக்கும்?
வாழ்வுரிமை மனித உரிமைகள் நிலையத்திலும் (R2L) எமது மனித உரிமைகள் முதலுதவி நிலையங்களின் (HRFAC) வலையமைப்பிலும், சமீபத்தில் ஒரு அதிர்வினை ஏற்படுத்திய அமைதியை நாங்கள் எதிர்கொண்டோம். மனித உரிமைப் பாதுகாப்பிற்கான வெளிநாட்டு நிதியுதவி, குறிப்பாக USAID போன்ற நிறுவனங்களின் பிரதான ஆதரவு செயற்திட்டங்கள் நிறுத்தப்பட்டமை வெறுமனே நிதிப்பிரச்சினை மட்டுமல்ல; அது எமது இருப்புக்கே விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகும்.
எங்களைப் பொறுத்தவரை, “நிலைபேண்தகுநிலை” என்பது வெறுமனே அலங்காரச் சொல் அல்ல; அது பதுளையில் சட்ட உதவியை எதிர்பார்க்கும் சித்திரவதைக்குள்ளான ஒருவரின் அல்லது அனுராதபுரத்தில் நீதி கோரும் நலிவடைந்த குடும்பத்தின் வாழ்வா சாவா என்ற வினாவாகும். சுருங்கி வரும் சிவில் சமூக இடைவெளியில், பாரம்பரிய நன்கொடையாளர் மாதிரியை மட்டுமே நாம் தொடர்ந்து நம்பியிருந்தால், நாம் மணல் மீது வீட்டைக் கட்டுகிறோம் என்பதை உணர்ந்தோம்.
எங்களுக்கு ஒரு பாரிய மாற்றம் தேவைப்பட்டது. “யார் எங்களுக்கு நிதியுதவி வழங்குவார்கள்?” என்று கேட்பதை நிறுத்திவிட்டு, “எங்களுக்கு நாமே எவ்வாறு நிதியை திரட்டிக்கொள்வது?” என்று கேட்கத் தொடங்கினோம்.

மாற்றம்: செயற்பாட்டாளர்களிலிருந்து தொழில்முனைவோராக
இதுவே எமது சமூக தொழில்முயற்சியாண்மை நோக்கிய பயணத்தின் ஆரம்பமாகும். ஆரம்பத்தில், இந்த மாற்றம் எங்களுக்குச் சற்றே சங்கடமாக இருந்தது. அரச சார்பற்ற நிறுவனத் துறையில் இருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு, இலாப எல்லை, பெறுமதி சங்கிலி, விரிவாக்கம் போன்ற வணிகம் தொடர்பான சொற்பதங்கள் அந்நியமானவையாகவும், எமது நிபந்தனையற்ற சேவை என்ற கொள்கைக்கு முரணானதாகவும் தோன்றியது.
இருப்பினும், R2L இந்த எண்ணக்கருவை ஆழமாகப் கற்க ஆரம்பித்தபோது, சமூக தொழில்முயற்சியாண்மை என்பது மக்களின் உழைப்பில் இலாபம் ஈட்டுவதல்ல; மாறாக மக்களுக்காக இலாபம் ஈட்டுவது என்பதைப் புரிந்துகொண்டோம். இது வணிக உத்திகளைப் பயன்படுத்தி மனித மற்றும் சுற்றுச்சூழல் நலன்களை மேம்படுத்தும் ஒரு கலப்பு மாதிரியாகும்.
ஆனால், இதை கொழும்பில் உள்ள ஒரு அலுவலகத்தில் அமர்ந்து எங்களால் வடிவமைக்க முடியவில்லை. எமது மிகப்பெரிய சொத்தான மனித உரிமைகள் முதலுதவி நிலைய வலையமைப்பை நாங்கள் நாடினோம்.
களமட்டத்திலிருந்தான ஞானம்
நாங்கள் மனித உரிமைகள் முதலுதவி நிலையங்களின் ஒருங்கிணைப்பாளர்களுடன் கலந்துரையாடியபோது, அவர்கள் தயங்குவார்கள் என்றே எதிர்பார்த்தோம். ஆனால், அதற்குப் பதிலாக அவர்களிடம் புத்தாக்கத்தையே கண்டோம்.
தேசிய மட்டத்தில் நாங்கள் நிதி தொடர்பில் கவலைப்பட்டுக்கொண்டிருந்த வேளையில், எமது களமட்டப் பாதுகாவலர்கள் ஏற்கனவே தத்தமது சமுதாயங்களின் பொருளாதார யதார்த்தங்களுடன் இணைந்திருப்பதை அறிந்தோம். அவர்கள் சிவில் உரிமைகளுக்காக மட்டுமன்றி, பொருளாதார தப்பிப்பிழைத்தலுக்காகவும் போராடும் சிறுதொழில்முயற்சியாளர்கள், சிறு விவசாயிகள் மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்தனர்.
HRFAC நிலையங்கள் பல ஆக்கபூர்வமான யோசனைகளை முன்வைத்தன. நாங்கள் பாதுகாக்கும் சமுதாயங்கள் வெறுமனே பயனாளர்கள் மட்டுமல்லாது, அவர்கள் உள்நாட்டு கைவினைப் பொருட்கள், பாரம்பரிய உணவுகள் மற்றும் சட்டமுறை சார்ந்த தயாரிப்புகளை உருவாக்கும் உற்பத்தியாளர்களும் கூட என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர். மனித உரிமைகளுக்கான போராட்டமும் பொருளாதார உரிமைகளுக்கான போராட்டமும் வெவ்வேறானவை அல்ல, அவை ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை அவர்கள் எங்களுக்கு உணர்த்தினர்.
“விருத்தி” (Vriddi): மீண்டெழுவதற்கான ஒரு மாதிரி
இந்த ஆலோசனைக் செயன்முறையே, தற்போது UNOPS ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் ‘இலங்கையில் மனித உரிமைகள் முதலுதவி நிலையங்களுக்கான சமூக தொழில்முயற்சியாண்மை மூலம் குடியியல் மீணடெழுதிறனைத் தக்கவைத்தல்’ என்ற செயற்திட்டத்திற்கு வழிவகுத்தது. குடியியல் மீண்டெழுதிறனைத் தக்கவைப்பதற்கான எமது துணிச்சலான முயற்சி இதுவாகும்.
இத்திட்டத்தின் மூலம், பாரம்பரிய HRFAC மாதிரியை நாங்கள் உருமாற்றியமைக்கிறோம். இந்த நிலையங்கள் மனித உரிமைகள் மற்றும் பொருளாதார வலுவூட்டல் நிலையங்களாக (HRSEDC) மாற்றப்படும் நிலையை நோக்கி நாங்கள் நகர்கிறோம். இதன் தொலைநோக்குப் பார்வை எளிமையானது ஆனால் புரட்சிகரமானதாகும்:
இயலளவை கட்டியெழுப்புதல்: வணிக யோசனைகள், மாதிரிகளை உருவாக்குதல் மற்றும் முகாமைத்துவம் ஆகியவற்றில் எமது மனித உரிமை பாதுகாவலர்களுக்கு பயிற்சியளிக்கிறோம்.
சந்தை அணுகல்: கிராமப்புற உற்பத்தியாளர்களை நகர்ப்புற நுகர்வோருடன் இணைக்க, எமது கொழும்பு அலுவலகத்தில் ‘சந்தர’ (Sandhara) என்ற மையப்படுத்தப்பட்ட சட்டமுறை சில்லறை விற்பனை மற்றும் கண்காட்சி நிலையத்தை உருவாக்குகிறோம்.
மீள்முதலீடு: இந்த சமூக நிறுவனங்கள் மூலம் ஈட்டப்படும் வருமானம் மீண்டும் நிறுவனத்திற்கே கொண்டு வரப்பட்டு, சட்ட உதவி, ஆவணப்படுத்துதல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவு போன்ற அத்தியாவசியப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும்.
நாங்கள் ஒரு செங்குத்தான கற்றல் பாதையின் ஆரம்பத்தில் இருக்கிறோம். ஒரு போராட்டத்தை நடாத்துவதை விட ஒரு வணிகத்தை நடாத்துவதற்கு வேறுபட்ட ஒழுக்கம் அவசியம் என்பதை நாங்கள் அறிவோம். இதில் அபாயங்கள், சந்தை மாற்றங்கள் மற்றும் தோல்விகள் இருக்கலாம். ஆனால், எமது நிலையங்கள் மூடப்படும் வரை அடுத்த நிதியுதவிக்காகக் காத்திருப்பது என்பது அதைவிடப் பாரிய ஆபத்தாகும்.
இது வெறும் வணிகத் திட்டம் மட்டுமல்ல. இது எமது புதிய வடிவிலான போராட்டமாகும்.


